சென்னை: தமிழகத்தில் காவல் நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லும்படியான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரை அறிவுறுத்தியுள்ளார்.
"அண்மைக்காலமாக சிறைக் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. தமிழகக் காவல்துறை, குற்றங்களைக் குறைக்கும் துறையாக இல்லாமல் குற்றமே இல்லாத துறையாக இருக்கவேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
தமிழகக் காவல்துறைக்கு அதி பரின் கௌரவமிக்க கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் காவல்துறை சார்பில் துணை அதிபர் வெங்கையா நாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பின்னர், அதிபரின் கொடியை மு.க. ஸ்டாலினிடம் துணை அதிபர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து முதல்வர் பேசுகையில், "தமிழகக் காவல் துறைக்கு அதிபரின் மிகவும் சிறப்பு மிக்க கொடி வழங்கப்பட்டுள்ளது. இது, காவல்துறைக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டிற்கே பெருமையாகும். பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாக விளங்கும் தமிழகக் காவல்துறை, உயிரைப் பொருட்படுத்தாமல் ஆற்றிய சேவைக்கு அங்கீகார மாக கொடி வழங்கப்பட்டுள்ளது.
"காவல்நிலைய மரணங்கள் இல்லை என்று கூறிவிடமுடியாது. அது குறைந்துள்ளது. இந்த நிலை இன்னும் மேம்பட வேண்டும். காவல்நிலையங்களில் மரணங்களே இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும்," என்றார்.

