சென்னை: தென்மேற்குப் பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. தமிழகத்தின் வான்வெளியில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.
இவற்றின் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 90 நீர்நிலைகள் 86.74 விழுக்காடு நிரம்பி இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், காவிரி உள்ளிட்ட பல தமிழக ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அளவுக்கு நீர் நிறைந்து செல்வதாகவும் காவிரியில் உடைப்பு ஏற்பட்டு தர்மபுரி, ஈரோடு, மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 31 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கிராமங்களில் இருந்து 4,035 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 14 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு வழக்கத்தைவிட அதிகமான தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அந்த அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அனைத்து பகுதிகளிலும் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கானாற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
ஈரோடு அருகே உள்ள பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதால், பவானி ஆற்றில் 7,350 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் அதி கரிப்பதால் அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள ஒன்பது மதகுகளில் உபரி நீர் திறக்கப்படுகிறது.
இதனால், கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, மேட்டூர், வீராணம், குண்டூர் உள்ளிட்ட 10 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிவிட்டதாகவும் இதர ஏரிகள் 70 முதல் 90% வரை நிரம்பி இருப்பதாகவும் வியாழக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தின் நீர்நிலைகளில் மொத்தம் 224.297 ஆயிரம் மில்லி யன் கன அடி தண்ணீரை தேக்க முடியும். இப்போது 194.55 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
இவ்வேளையில், மாநிலத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை முதல் கடும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு நிலையம் அறிவித்து இருக்கிறது.

