சென்னை: தமிழகத்தில் பத்தாயிரம் குறுங்காடுகளை உருவாக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தற்போது காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுகளில் உலகின் சராசரி வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்றும் அடுத்த பத்து ஆண்டுகளில் 0.2 டிகிரி வரை வெப்பம் உயர வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அப்போது பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என அவர் கவலை தெரிவித்தார்.
எனவே, கரிம வெளியேற்றத்தைக் குறைக்கவும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தடுத்து, அதிக மரங்கள் வளர்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் வனப்பரப்பு தற்போது 22.71 விழுக்காடாக உள்ளது என்றும் அடுத்த பத்தாண்டுகளில் இதை 33% ஆக உயர்த்தும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகவும் கூறினார்.
"சுற்றுச்சூழல் துறை சார்பில், பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் 10 ஆயிரம் குறுங்காடுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் 52 ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றின் மூலம் தலா 1,000 உள்நாட்டு மரங்களைக் கொண்ட குறுங்காடுகள் உருவாக்கப்படும்," என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

