காஞ்சிபுரம்: சென்னையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் கட்டப்பட உள்ளது.
இதனால், இம்மாவட்டத்தில் உள்ள 3,000 ஏக்கர் விளைநிலங்களும் 1,000க்கும் மேலான குடியிருப்புகளும் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் உள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் வருத்தம் தெரிவித் துள்ளனர்.
"எங்களைப் பொறுத்தவரை இந்தச் செய்தி மகிழ்ச்சியான செய்தியல்ல; அதிர்ச்சியான செய்தி," என்று அங்கு வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர்.
பரந்தூர் பகுதியில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் அமைக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்தப் புதிய விமான நிலையம் 4,971 ஏக்கரில், ரூ.20,000 கோடி மதிப்பீட்டில், 10 கோடி பயணி களைக் கையாளும் திறனுடன் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் ஏராளமான விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் அழித்துவிட்டு விமானநிலையத்தை உருவாக்குவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறுகையில், "புதிய விமானநிலையம் அமைவதை ஒருபுறம் வரவேற்கிறோம். மறுபுறம், காஞ்சிபுரத்தில் உள்ள வளத்தூர், நெல்வாய், பரந்தூர், தண்டலம், பொடவூர், மடப்புரம் கிராமங்களிலும் திருப்பெரும்புதூரில் உள்ள இடையார்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், சிங்கில்பாடி உள்ளிட்ட கிராமங்களிலும் உள்ள நிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும். கையகப்படுத்தும் இடத்திற்குச் சந்தை மதிப்பைவிடவும் மும்மடங்கு அதிகமாக மக்களிடம் இழப்பீடு வழங்கவேண்டும்.
"1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு புதுவீடு கட்டிக்கொடுக்கும்வரை அவர்களை அங்கிருந்து போகச் சொல்லி நெருக்குதல் கொடுக்கக் கூடாது," என வலியுறுத்தி உள்ளார்.
"இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் படித்துக்கொண்டே விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது படிப்பும் விவசாயமும் பாழாகிவிடும். ஊரை விட்டு துரத்திவிடுவார்களோ என்ற அச்சத்துடன் கிராம மக்கள் பலரும் உள்ளனர். மக்களைப் பாதிக்காத வகையில் விமான நிலையத்தைக் கட்டவேண்டும்," என பரந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே.பலராமன் கூறியுள்ளார்.

