சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் அடுத்து காற்றாடி திருவிழா நடைபெறவுள்ளது.
தமிழக சுற்றுலாத் துறை பங்களிப்புடன் மாமல்லபுரம் கடலோரப் பகுதியில் அனைத்துலக காற்றாடி திருவிழா மூன்று நாள்கள் நடக்கிறது.
தமிழகத்தில் காற்றாடி திருவிழா முதல் முறையாக நடப்பதால் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.
மாமல்லபுரத்தில், கி.பி. 7- 8ஆம் நுாற்றாண்டு பல்லவர் கால கலைச்சின்னங்கள் கம்பீரமாக வீற்றுள்ளன.
பிரதமர் மோடி-சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் 2019ஆம் ஆண்டில் இங்கு சந்தித்தபோது, மாமல்லபுரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
பண்டைய தமிழக-சீன தொடர்பை அறிந்து வெளிநாட்டுப் பயணியர் இங்கு சுற்றுலாவிற்குக் குவிந்தனர்.
மற்றோர் உலகக் கவன ஈர்ப்பு நிகழ்வாக 44வது அனைத்துலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 29ஆம் தொடங்கி சென்ற செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இதனால் இப்பகுதியை அறியாத பல வெளிநாட்டவர் அறிந்து வியந்தனர்.
இந்த நிலையில் மற்றொரு நிகழ்வாக, அனைத்துலக காற்றாடி திருவிழாவும் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது.
குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம், தமிழக சுற்றுலாத் துறையுடன் சேர்ந்து சனிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 15 வரை இவ்விழாவை நடத்துகிறது.
சென்னை, பொள்ளாச்சி பகுதி களில், வெப்பக் காற்று பலுான் விழாவை ஆண்டுதோறும் நடத்தும் நிறுவனம், தமிழகத்தில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் அனைத்துலக காற்றாடி திரு விழாவை நடத்துகிறது.
இந்த காற்றாடி திருவிழாவில் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 80 காற்றாடி கலைஞர்கள், பிரம்மாண்ட வண்ணக் காற்றாடிகள் பறக்க விடுகின்றனர் என்று தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகக் கலாசாரம் கருதி, மாமல்லபுரம் கடற்கரை கோவில், திருவள்ளுவர் உருவம், ரசிகர்களை கவரும் யானை, குதிரை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள், கார்ட்டூன் வடிவங்களில் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன. வான்குடையில் பயன்படுத்தும் நைலானில் தயாரிக்கப்பட்ட மூன்று அடி முதல் 20 அடி உயர காற்றாடிகளும் பறக்க விடப்படும்.
அனைத்துலக காற்றாடி விழாவையொட்டி மூன்று நாள்கள் இரவில் அரங்கங்களில் பல்வேறு வித்தியாசமான உணவு வகைகள் விற்கப்படும். இசை நிகழ்ச்சி, காற்றாடி செய்முறை விளக்கம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.150, சிறுவர்களுக்கு இலவசம்.
மேல் விவரங்கள் www.tnikf.com என்ற இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ளன.

