கோவை: கோவை அவினாசி சாலையில் 10.3 கிலோ மீட்டருக்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. 300க்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் அனைத்துக் கட்சியினரின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், 10 நாள்களுக்குள் சுவரொட்டிகள் அனைத்தையும் அகற்றவேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
ஆனால், 10 நாள்களுக்கு மேலாகியும் சுவரொட்டிகள் அகற்றப்படாததைக் கண்டித்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேலான பாஜகவினர் நள்ளிரவு நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலத்தின் தூண்களில் திமுக ஒட்டியிருந்த சுவரொட்டிகளைக் கிழித்து எரிந்து தமிழக அரசைக் கண்டித்து, "ஊர் முழுவதும் சுவரொட்டி, ஊர் முழுவதும் 'பிளக்ஸ்'. எடுக்கச் சொன்னால் வழக்கா?" என்று முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், சுவரொட்டிகளைக் கிழித்த பாஜகவைச் சேர்ந்த 40 பேரை காவல்துறையினர் குண்டு கட்டாகத் தூக்கிச்சென்று கைது செய்தனர்.

