நாமக்கல்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கரின் வீட்டிலும் அவருக்குச் சொந்தமான 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மைய சில மாதங்களாக எஸ்.பி.வேலுமணி. எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட சில முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களின் வீடுகளில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், இப்போது நாமக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான கே.பி.பி. பாஸ்கர் மீது, வரு மானத்துக்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவர் நாமக்கல், மதுரை, திருப்பூர் ஆகிய இடங்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக 40 டேங்கர் லாரிகள் உள்ளதாகவும் கூறப்படு கிறது. அதிமுக பொதுக்குழு உறுப் பினராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், புகார் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், வருமானத்துக்கு அதிகமாக 315%, அதாவது 4 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பாஸ்கர் வாங்கிக் குவித்துள்ளதை உறுதிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, பாஸ்கர் மீதும் அவரது மனைவி உமா மீதும் வழக்குப் பதிந்து, நாமக்கல், மதுரை, திருப்பூர் உட்பட 26 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அவரது நெருங்கிய நண்பர்களான மயில்சுந்தரம், சேகரின் வீடுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்தது. திருப்பூரில் உள்ள பாஸ்கரின் உறவினர் ஹரி என்பவருக்குச் சொந்தமான கட்டுமான அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

