மூன்று நாள் உணவுத் திருவிழா
சென்னை: சென்னை தீவுத்திடலில் 'சிங்காரச் சென்னை 2022' என்ற உணவுத் திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். வரும் ஞாயிறு வரை மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்த உணவு விழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ராகி புட்டு, ராகி தோசை, முடக்கத்தான் தோசை, பிரண்டை தோசை, குதிரைவாலி, சாமை, தினை உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், கோவில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட அனைத்து பிரபலமான உணவுப்பொருள்களும் இவ்விழாவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த்: போதைப்பொருள் ஒழிப்போடு மதுவிலக்கும் தேவை
சென்னை: இந்தியாவின் முக்கிய தூண்களாக இருக்கும் இளைஞா்கள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமூகத்தைச் சீரழிக்கும் இவற்றைத் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப்பொருள்களை ஒழிப்பதில் தீவிர அக்கறை காட்டும் மாநில அரசு, 'டாஸ்மாக்' மதுக்கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுப்பது மிக அவசியம் என்றும் கூறியுள்ளாா்.
விரைவில் ஏவுதளக் கட்டுமானம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. ஏவுதளம் அமைய உள்ள கூடல் நகர்ப் பகுதியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆய்வு செய்தார். "ஏவுதளத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் எஸ்எஸ்எல்வி போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்றதாக இவை இருக்கும்," என்றும் கூறினார்.
44 கடைகளை மூடி, முத்திரை
சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்த்துத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 9 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 153 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சான்றிதழ்களைத் தீவைத்து
எரித்த லட்சாதிபதி கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்குள் நுழைந்து கல்விச் சான்றிதழ்களைத் தீவைத்து எரித்தவர் காணொளி மூலம் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார். பள்ளியின் அறைைய உடைத்து, சான்றிதழ் இருந்த அறைக்குத் தீவைத்தவர் சின்னசேலம் அருகே உள்ள வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி என்பது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி, 17, சந்தேகத்துக்குரிய வகையில் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பில், நீதி கேட்கச் சென்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கலவரக்காரர்களைக் கைது செய்து வருகின்றனர். இதுவரை 306 பேர் கைதாகி உள்ளனர்.

