மதுரை: ராணுவத்தில் பணியாற்றி வந்த இரட்டை மகன்களில் ஒருவர் நாட்டுக்காக உயிரை நீத்துள்ள நிலையிலும், தன் மற்றொரு மகனையும் நாட்டிற்குச் சேவையாற்ற அனுப்புவேன் என்று உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் தந்தை உருக்கமாகக் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி களோடு நடைபெற்ற சண்டையில் தமிழக வீரர் லட்சுமணன், 24, வீர மரணம் அடைந்தார்.
இந்தச் சம்பவம் டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கரவாதிகள் இருவர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
அதனை முறியடிப்பதற்காக இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவரும் உயிரிழந்தனர்.
அதேவேளையில் மூன்று இந்திய வீரர்களும் உயிரிழந்தனர். இவர்களில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். எஞ்சிய இருவர் ராஜஸ்தான், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், "இன்னுயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி, வீரவணக்கம் செலுத்துகிறேன்," என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ராணுவ வீரர் லட்சு மணன் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாயை அரசு நிதியுதவியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 முதல் இந்திய ராணுவத்தில் 'ரைபிள்மேனாக' லட்சுமணன் பணியாற்றி வந்தார். அவருடைய பெற்றோர் தர்மராஜ்- ஆண்டாள். ராமன், லட்சுமணன் இரட்டையர்கள். மகன்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்து வந்த நிலையில், லட்சுமணன் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், நாட்டிற்காகச் சேவையாற்றச் சென்ற லட்சுமணன், நாட்டிற்காக உயிரைக் கொடுத்தது பெருமையே என்று கூறியுள்ள அவர்களது தந்தை தர்மராஜ், இன்னொரு மகனையும் நாட்டுக்காகச் சேவை செய்ய அனுப்புவேன் என்றும் கூறியுள்ளார்.
லட்சுமணனின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவ ரது உடல் வைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் எனவும் ராணுவத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டிற்காகச் சேவையாற்றச் சென்ற
என் மகன் லட்சுமணன் உயிரைக் கொடுத்தது பெருமையே.
இதனால் நான் உடைந்து விடவில்லை. எனது இன்னொரு மகன் ராமனையும் நாட்டுக்காகச் சேவையாற்றத் துணிச்சலுடன் அனுப்புவேன்.
உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் (இடது)
தந்தை தர்மராஜ்.

