நாமக்கல்: நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கரின் வீடு உட்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ரூ.26 லட்சம் ரொக்கம், 4 சொகுசு கார்கள், ஒன்றேமுக்கால் கிலோ தங்க நகைகள், வெளிநாட்டுப் பணம் உள்ளிட்டவற்றை தாங்கள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமானத்துக்கும் அதிகமாக ரூ.4 கோடியே 72 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்த வழக்குத் தொடர்பில், நாமக்கல்லில் 24 இடங்களிலும் திருப்பூர், மதுரையில் தலா ஓர் இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை நடந்துகொண்டிருந்த போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரண்டனர்.
இந்தச் சோதனையின் முடிவில், 26 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம், ஒரு கிலோ 680 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள 'கிரிப்டோ கரன்சி' முதலீடுகள், 4 சொகுசு கார்கள் மற்றும் வழக்கு தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத் தோடு சோதனை நடத்தப்படுவதாக அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

