தொடர் விடுமுறை: சென்னையில் 610 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊர் செல்வதற்காகச் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் 610 சிறப்புப் பேருந்துகள் விடப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதனைப் பயன்படுத்தி இப்பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் புகார் கூறினர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓபிஎஸ்: விமானத்திற்கு ஈடாக ஆம்னி பேருந்துக் கட்டணம்
சென்னை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கையில், ரூ.800 முதல் ரூ.900 வரை வசூலித்த ஆம்னி பேருந்துகள், இப்போது விமானங்களுக்கு இணையாக கட்டணத்தை உயர்த்தி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார். சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.3,200, திருச்சிக்கு 3,000, நாகர்கோவிலுக்கு ரூ.3,850, கோவைக்கு ரூ.4,000 வசூலிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் பேருந்துக் கட்டணத்தை ஒரு கட்டுக்குள் வைக்கவேண்டியது அரசின் பொறுப்பு. அதிக கட்டண வசூலைத் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறந்த மூன்று நகராட்சிகள் தேர்வு
சென்னை: தமிழகத்தில் உள்ள 151 நகராட்சிகளில் சிறப்பாகச் செயல்படும் மூன்று நகராட்சிகளைத் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. அதில், திருவில்லிப்புத்தூர் முதலாவது இடத்தையும் குடியாத்தம், தென்காசி ஆகியன அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்த நகராட்சிகளுக்கு சிறப்பு நிதி, கேடயத்தை முதல்வர் வழங்க உள்ளார். திருவில்லிப்புத்தூர் நகராட்சிக்கு ரூ.15 லட்சம், இரண்டாவது, மூன்றாவது நகராட்சிகளுக்கு முறையே ரூ.10, ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நால்வர் தமிழகம் வருகை
ராமநாதபுரம்: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகு மூலம் மேலும் நால்வர் அகதிகளாக ராமேசுவரத்துக்கு நேற்று அதிகாலையில் வந்து சேர்ந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜெயமாலினி, பதுர்ஜன், ஹம்சிகன், பதுஷிகா ஆகிய நால்வரிடமும் மண்டபம் கடற்துறை காவல்நிலைய காவலர்கள் விசாரணை நடத்தினர். மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்களைப்போன்று கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்டோர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடி, ராமேசுவரத்துக்கு வந்துள்ளனா்.
நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனிக்கு விருது
நாகப்பட்டினம்: முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்குப் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல் ஜெயராமனுக்குப் பிறகு பல மாநிலங்களுக்கும் சென்று 1,250 பாரம்பரிய நெல் ரகத்தைச் சிவரஞ்சனி மீட்டெடுத்துள்ளார். சமூக வளர்ச்சிக்குச் சேவையாற்றிய வேலூரைச் சேர்ந்த விஜயகுமார், ஸ்ரீகாந்த், நீலகிரியைச் சேர்ந்த முகமது ஆஷிக் ஆகியோரும் மாநில இளைஞர் விருதுக்குத் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு விருதும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் சான்றிதழும் முதல்வர் வழங்க உள்ளார்.
பட்டம் விடும் விழா தொடங்கியது
மாமல்லபுரம்: சதுரங்க ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் அனைத்துலகப் பட்டம் விடும் விழா நேற்று தொடங்கியது. வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10 அணிகளும் கலந்துகொள்கின்றன.

