சென்னை: தனது கார் மீது வீசப்பட்ட காலணியை தமிழக நிதி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாதுகாத்து வருகிறார்.
"எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். காலணியைத் திரும்பப் பெற விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்," என்று டுவிட்டர் பதிவில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்ற சனிக்கிழமை காஷ் மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் காரை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது கார் மீது காலணி வீசப்பட்டது.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை இம்மாதம் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதற்கிடையே மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மருத்து வர் சரவணன் சனிக்கிழமை நள்ளிரவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித் தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன், பாஜகவிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார்.
"எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பாஜகவில் தொடரவில்லை. இன்று காலை விலகல் கடிதத்தைக் கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும்.
"திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. திமுகவில் இணைந்தாலும் தப்பில்லை. திமுக, எனது தாய் வீடு. 10-15 ஆண்டு களாக நான் உழைத்த கட்சி திமுக," என்று சனிக்கிழமை இரவு தெரிவித் தார்.
திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் கடந்த ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப் படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் வகையில் சரவணன் நடந்துகொண்டதாகவும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சரவணனைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அண்ணாமலை தனது அறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

