மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலோரப் பகுதியில் அனைத்துலக காற்றாடி திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
தமிழக சுற்றுலாத் துறை பங்களிப்புடன் 'குளோபல் மீடியா பாக்ஸ்' என்ற நிறுவனம் இந்த பட்டம் விடும் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரை இது நடைபெறுகிறது.
தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் காற்றாடி திருவிழா, மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதி, மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக கடலோர திறந்தவெளி பகுதியில் நடைபெற்றது.
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சர் அன்பரசன், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் காற்றாடி திருவிழாவை தொடங்கி வைத்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, புதுடெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களும் அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளும் இதில் பங்கேற்றன.
இவர்கள் 80 முதல் 100 காற்றாடிகளைப் பறக்கவிட்டனர். வர்ணஜாலத்துடன் வானத்தில் பல வடிவில் பறந்த காற்றாடிகள் காண்போரை உற்சாகம் அடைய வைத்தன. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்திருவிழாவுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

