சென்னை: தேசிய கொடியைப் பிடிக்கவும் திருப்பிப் பிடித்து தடியாக மாற்றவும் தெரியும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் முழங்கி யுள்ளார்.
நங்கநல்லூர் பகுதியில் இருந்து ஆதம்பாக்கம் வரை காங்கிரஸ் சார்பில் நேற்று பாதயாத்திரை நடைபெற்றது. தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் இதற்கு தலைமை தாங்கினார். பாத யாத்திரை பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "இந்தியாவின் 75வது சுதந்திர தின பவள விழாவிற்கு காங்கிரஸ்காரர்கள் தான் சொந்தக்காரர்கள். தேசத்திற்குத் துரோகம் செய்தவர்கள், மூவர்ண கொடியை தூக்கிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் தேசியக் கொடியை கட்டிச் செல்கிறார். அவர் மீது பா.ஜனதாவினர் செருப்பு வீசுகின்றனர். தமிழக மக்கள் பொங்கி எழுந்தால் நீங்கள் பஸ்பமாகிவிடுவீர்கள். தேசத் துரோக புழுக்களை அழிக்க நாங்கள் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம். காங்கிரஸ் கட்சிக்காரர் களுக்கு கொடியைப் பிடிக்கவும் தெரியும், கொடியைத் திருப்பிப் பிடித்து தடியாக மாற்றவும் தெரியும்," என்றார்.

