சொத்து தொடர்பான
சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல்
சென்னை: மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் உறுதியானால் அந்த பத்திரங்களை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில், சில ஆண்டுகளில் மோசடி பத்திரப்பதிவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. உரிமையாளருக்கு தெரியாமல், வேறு நபர்கள் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை பயன்படுத்தி, மோசடி பத்திரப்பதிவுகளை மேற்கொள்கின்றனர்.
இதனைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தம் இடம்பெறுகிறது.
மோசடி புகார் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட பத்திரத்தால் பாதிக்கப்பட்டதாக யாராவது கருதினால் உரிய காரணங்களுடன் 30 நாட்களுக்குள் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.
மோசடி பத்திரப்பதிவுக்கு துணைபோகும் சார்-பதிவாளருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மோசடி பத்திரப்பதிவால் பாதிக்கப்பட்டு, சொத்தை இழக்கும் பொதுமக்களின் புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இது வழிவகுக்கிறது.
கோயில்களுக்கே கோயில்
சொத்து: நீதிமன்றம் உத்தரவு
சென்னை: "கோயில் சொத்து கோயில்களுக்கே, அறநிலையத் துறை சொத்தாக கருதக் கூடாது," என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
"கோயில்களுக்குப் பக்தர்கள் நன்கொடையாக, சொத்துகளை அளிக்கின்றனர். அதனால், கோவில் சொத்துகளை, அறநிலையத் துறை சொத்துகளாக கருத முடியாது.
"அவை எல்லாம் கோவில் சொத்துகளாகவே இருக்க வேண்டும். அறங்காவலர்களுடன் ஆலோசிக்காமல், கோவில் சொத்துகளின் உரிமையை மாற்றுகின்றனர். கோயில் சொத்துகளை அறநிலையத் துறை உரிமை கோருவதற்கு தடை விதிக்க வேண்டும்," என்று மனுவில் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் அமர்வு' முன் விசாரணைக்கு வந்தது.
"சொத்து மாற்றம் தொடர்பாக, ஆட்சேபணைகள், பரிந்துரைகள் கோரி விளம்பரம் வெளியிடும்போது, அறங்காவலர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம். கோவில் சொத்தில் மாற்றம் மேற்கொள்ள, அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரம் இருக்கும் வேளையில், அந்தச் சொத்தை, அறநிலையத் துறையின் சொத்தாகக் கருதக் கூடாது. அது கோவில் சொத்துதான். சொத்து மாற்றத்தை, அறநிலையத் துறை சட்டப்படியே மேற்கொள்ள முடியும்," என்று முதல் அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

