ராமேஸ்வரம்: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரதின விழாவைக் கொண்டாடும்விதமாக ராமேஸ்வரம் மீனவர்களுடன் விசைப்படகில் கடலில் பயணம் செய்து சுதந்திர தினவிழாவை அண்ணாமலை, பாஜகவினருடன் கொண்டாடினார்.
அதன்பின் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "கச்சத்தீவை மீட்பதற்கு பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம். இதுவே, தமிழக பாஜகவின் லட்சியம்,'' என்றார். அத்துடன், பாஜகவைச் சேர்ந்த மதுரை மாவட்டச் செயலாளர் சரவணன், பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்து மன்னிப்பு கோரியதை அடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அண்ணாமலை கூறினார்.
இதனிடையே, காலணி வீசப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். "இது தமிழ்நாடு. இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்," என எச்சரித்துள்ளார். காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

