சென்னை: சென்னையில் நடந்த வங்கிக்கொள்ளையில் ஏழு பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், இந்தச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டார்.
கொள்ளை நடந்த 72 மணி நேரத்தில் நான்கு குற்றவாளிகளைத் தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைதான பாலாஜி, சந்தோஷ், சக்திவேல் ஆகியோரிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகளும் இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
நான்கு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் எஞ்சிய நகைகள் விரைவில் மீட்கப் படும் எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று வங்கி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
காவல்துறையினர் முழுமையாக மீட்டு வந்தால் நகையாகவோ அல்லது பணமாகவோ வாடிக்கையாளர் களிடம் திருப்பித் தரப்படும் என்றும் வங்கி உறுதி அளித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நகைக்கடன் வங்கி யில் இரு நாள்களுக்கு முன்பு புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த காவலாளியையும் ஊழியர்களையும் கட்டிப் போட்டுவிட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளைத் திருடிச்சென்றனர்.
கொள்ளை அடித்த வங்கியில் பதிவான சிசிடிவி கேமராக்களையும் கொள்ளையர்கள் கையோடு எடுத்துச் சென்றுவிட்ட நிலையில், வங்கி அருகில் இருந்த கட்டடங்களில் பதிவான கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகள் அடிப்படையில் தனிப்படைக் காவலர்கள் துப்புதுலக்கி வருகின்றனர்.
கொள்ளை அடிக்கும் முன்பாக வங்கி முன்பு கொள்ளையர்கள் நோட்டமிடும் காட்சியையும் தங்க நகையை மூன்று மூட்டைகளில் அள்ளிக்கொண்டு இரு சக்கர வாகனங்களில் அவர்கள் தப்பிச் செல்லும் காட்சியையும் காவலர்கள் வெளியிட்டுள்ளனர்.
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட முருகன் உள்பட அதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரும் உடற்பயிற்சிக் கூடத்தில் அறிமுகம் ஆனவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முருகனுடன் சேர்ந்து பல நாள்கள் திட்டம் போட்டதாகவும் பின்னரே இதனை அரங்கேற்றியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.