ஈரோடு: தமிழகப் பள்ளி மாணவர்களின் மனதில் தன்னம்பிக் கையை வளர்க்கும் வகையில், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, அவர்களது மனநலனை நல்வழிப்படுத்துவதற்காக 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஈரோடு புத்தகத் திருவிழாவைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர் களிடம் பேசியபோது, "பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறைதான் ஒரு பள்ளிக்கு மருத்துவர்கள் ஆலோ சனைகள் வழங்கச் செல்வார்கள்.
"ஆனால், இப்போதைய சூழலில் அதிகமானோருக்கு ஆலோசனை வழங்கவேண்டிய தேவை உள்ளதால், மூன்று மாதத்திற்கு ஒருமுறை பள்ளிகளுக்குச் சென்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
இதற்காக 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பணியைத் தொடங்கி வைத்துள்ளார்," என்று கூறினார்.
தேர்வுகளை எதிர்கொள்ள பயம் கொள்வது, குடும்பப் பிரச்சினை, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சரியான முறையில் கையாளத் தெரியாமல் திணறுவது உள்ளிட்ட காரணங்களால் தமிழக மாணவர்கள் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இச்சூழலில், மாணவ, மாணவி களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்குவது மிகவும் முக்கியம் என்பதால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவர்கள் மாணவர்களுக்குப் பலவழிகளிலும் ஆலோசனைகள் கூறி அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார்கள் என்று ஈரோட்டில் அளித்த பேட்டியில் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப்பொருள்களின் புழக்கத்தைத் தடுக்க கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
சரியாக கவனம் செலுத்தாமல் விட்டுவிட்ட பிரச்சினைகள் இப்போது சமூகத்தைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதால், அவற்றை அடையாளம் கண்டு தீர்வுகாண நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இதில் எந்தக் குழப்பமும் இல்லா மல் அனைத்து மாணவர்களும் பாடத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறினார்.
மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க அரசு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், மாணவர்களைப் பெற்றோரும் தொடர்ந்து கண்காணித்து அவர்களது வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

