செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
621bcb3d-6047-445f-a56c-039150552191
-

டெல்லிக்குச் சென்ற முதல்வர்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு டெல்லிக்குப் பயணம் புறப்பட்டுச் சென்றார். இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது

சென்னை: தமிழகத்தில் ஒன்று, இரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்தும்படி அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும்படையினர் மூலம் உறுதி செய்து, அதனை அறிக்கையாக சமர்ப்பிக்கும்படியும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

துப்புரவு ஊழியர்களுக்கு விருந்து

குன்றத்தூர்: சுதந்திர தினத்தை ஒட்டி குன்றத்தூர் நகராட்சி சார்பில், துப்புரவு ஊழியர்கள் விருந்தளித்து கௌரவிக்கப்பட்டனர். இறைச்சி பிரியாணியுடன் வேட்டி சேலைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. நகராட்சித் தலைவர், ஆணையர், கவுன்சிலர்கள் ஆகியோர் துப்புரவு ஊழியர்களுக்கு உணவு பரிமாறினர். "காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் முழுவதும் தூய்மையாக இருப்பதற்கு துப்புரவு ஊழியர்களே காரணம். இதற்கு நன்றி தெரிவிக்கவே அவர்களுக்கு விருந்தளித்து கௌரவித்தோம்," என நகராட்சி ஆணையர் கூறினார்.

கண்ணனுக்கு 26 வரை சிறை

சென்னை: சென்னை மதுரவாயலில் சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்துக்கள் உரிமை மீட்புக் கூட்டத்தில், பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சினிமா சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அவரை சென்னைக்கு அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி, வரும் 26ஆம் தேதி வரை கனல் கண்ணனைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

எத்தனையோ பேர் சர்ச்சையாகப் பேசி, சுதந்திரமாக நடமாடும்போது, கனல் கண்ணனுக்கு மட்டும் ஏன் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி பேர் பார்வையிட்டனர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள முன்னாள் அதிபர் அப்துல்கலாம் தேசிய நினைவகத்தை நேற்று வரை 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். இதையறிந்த அப்துல்கலாம் பேரன் ேஷக் சலீம் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு கோடியைக் கடந்தபின் வந்த இரு குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.