சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுகூரும் விதமாக, சென்னை எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரை 'இ.ஐ.ஆர்-21' என்ற நீராவி இயந்திர ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் 1855ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டு அவுரா-ராணிகாஞ்ச் பகுதியில் இயக்கப்பட்டது.
அதன்பின்னர், இந்தியாவில் 55 ஆண்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்த இந்த ரயில், 1909ஆம் ஆண்டுக்குப் பின்னர் பீகார் மாநிலம், ஜமால்பூர், மேற்கு வங்க மாநிலம், ஹவுரா ரயில் நிலை யங்களில் 101 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சிப் பொருளாக இருந்துவந்தது.
இதைத்தொடர்ந்து பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலைக்கு கடந்த 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், பாரம்பரிய ரயில் இயக்கத்தை நினைவு கூரும் வகையில் சென்னை யில் இந்த ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8 முறை இயக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் இயக்கப்படாமல் இருந்த இந்த ரயில் 9வது முறையாக இப்போது இயக்கப்பட்டுள்ளது. 167 ஆண்டு பழமையான இந்த ரயில் நிலக்கரி மூலம் நீராவியால் இயங்கக்கூடியது. விசில் சத்தத்துடன் 'குபுகுபு' என புகையை வெளியேற்றியபடி செல்லும் இந்த ரயிலின் அழகைக் கண்டு ரசிக்க ஏராளமான குழந்தைகளும் பெரியோர்களும் ரயில் நிலையங்களில் திரண்டு நின்றனர்.

