சென்னை: ெசன்னையில் நடந்த 75வது சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளிலும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தவர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 'முதல்வரின் மாநில இளைஞர் விருது' ஒரு பெண் உட்பட நால்வருக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதைப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், பதக்கத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மாநில இளைஞர் விருதை விஜயகுமார், ஸ்ரீகாந்த், முகமது ஆசிக், சிவரஞ்சனி ஆகியோர் பெற்றனர்.
விஜயகுமார் பேசுகையில்,"உக்ரேன்-ரஷ்யா போரின்போது பதற்ற நிலையில் இருந்த 35 தமிழக மாண வர்களை அரசுடன் இணைந்து போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து, மீட்கும் பணிகளில் ஈடுபட்டேன். விருதுக்காக நான் இதைச் செய்யவில்லை," என்றார்.
பாலாற்றுப் பகுதியில் 25 ஏக்கர் வனத்தை உருவாக்கி இருப்பதற்காக விருது வழங்கப்பட்டதாக ஸ்ரீகாந்த் கூறினார்.
சிவரஞ்சனி கூறுகையில், 2015 முதல் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு வருகிறேன். இந்தியா முழு வதும் 1,250க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்விதைகளைச் சேகரித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
முகமது ஆசிக் கூறுகையில், உறவினர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்ற 12,000க்கும் மேற்பட்ட சடலங்களை எடுத்து நல்லடக்கம் செய்ததற்காக மாநில இளைஞர் விருது பெற்றிருக்கிறேன் என்றார்.
வீரதீரச் செயல் புரிந்த நாகப்பட்டி னத்தைச் சேர்ந்த எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இவ்விருதை சமூகத்தில் கிடைத்த சிறந்த அங்கீகாரமாகப் பார்ப்பதாக இவர் கூறியுள்ளார்.
எழிலரசி கூறுகையில், "கோயில் குளத்தில் ஒரு சிறுவன் வழுக்கி விழுந்துவிட்டான். அவனைக் காப்பாற்றச் சென்ற மற்றொரு சிறுவனும் விழுந்துவிட்டான். இருவரையும் காப்பாற்ற நான் குளத்தில் இறங்கியபோது என்னாலும் அவர்களைக் காப்பாற்றி மேலே கொண்டுவர முடியவில்லை. ஏனெனில், எனக்கும் நீச்சல் தெரியாது. 15 நிமிடம் வரை இரு சிறுவர்களையும் பிடித்துக்கொண்டே போராடிக்கொண்டிருந்தேன். ஊர் மக்கள் எங்களைக் காப்பாற்றினார்கள்," என்று கூறினார்.
அப்துல் கலாம் விருது பெற்ற பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார் இஞ்ஞாசி முத்து. இந்தியாவின் 10வது சிறந்த விஞ்ஞானியாக அடையாளம் காணப்பட்டுள்ள இவர், 700க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் 31க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதி பதிப்பித்துள்ளார்.

