கொடைக்கானல்: சுதந்திர தினத்திற்கு சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாள்கள் தொடர்ச்சியான விடுமுறை கிடைத்தது. அதைக் கொண்டாடும் வகையில் மக்கள் சுற்றுலாத் தலங்கள் நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அவ்வகையில் கொடைக்கானலில் என்றும் இல்லாத வகையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் பன்மடங்கு அதிகரித்தது. கடந்த மூன்று நாள்களாக கொடைக்கானல் நகர்ப் பகுதியிலும், முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த 3 நாள்களில் மட்டும் நூறாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விடுதிகளில் முன்பதிவு செய்யாமல் வந்த பலரும் தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் இரவுநேரத்தில் வாகனங்களிலே உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து காட்டேஜ்களிலும், தங்கும் விடுதிகளிலும் அறைகள் நிரம்பின.
அப்படியே விடுதி கிடைத்தாலும் கட்டணம் வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல் போக்குவரத்துக் கட்டணமும் பன்மடங்கு அதிகரித்தது.
மோயர் பாய்ண்ட், தூண்பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

