சென்னை: சுதந்திர தினத்தையொட்டி இந்தியா முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் சென்னையில், சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், கலைவாணர் அரங்கத்தில் 'விடுதலைப் போரில் வீரத்தமிழகம்' என்ற தலைப்பில் முப்பரிமான ஒளி, ஒலி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும், நாடு சுதந்திரம் பெற அவர்கள் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூரும் வகையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 'விடுதலைப் போரில் வீரத் தமிழகம்' என்ற முப்பரிமாண ஒளி, ஒலி கண்காட்சியை தமிழ் நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தனர்.
மின் திரையில், இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களும், இந்தியாவின் சுதந்திர வரலாறும் காட்சிகளாக திரையிடப்பட்டன.
கண்காட்சியில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரர்கள், தலைவர்களின் வடிவமைப்பில் பொம்மைகள், படங்கள், ஓவியங்கள், விளக்கப்படங்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நாட்டுக்காகப் பாடுபட்ட தமிழர்களை மக்கள் அறிந்து கொள்ள இந்தக் கண்காட்சி உதவியது.

