சென்னை: சென்னை வடபழனியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்துக்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர்களைக் கத்தி முனையில் மிரட்டி பாதுகாப்புப் பெட்ட கத்தில் இருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையர்கள் சுருட்டிக் கொண்டு தப்பியுள்ளனர்.
இந்தக் கொள்ளையில் தொடர்பு டைய ஏழு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவானவர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படை காவலர்கள் களமிறங்கி உள்ளனர்.
சென்னை எண்ணூரைச் சேர்ந்த தீபக்,32, என்பவர், சென்னை வடபழனி மன்னார்முதலி தெருவில் 'ஓசோன் கேபிட்டல்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிறுவனம் சிறு வியாபாரிகளுக்கும் கோயம்பேடு சந்தையில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கும் வட்டிக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்நிறுவனத்துக்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தீபக், சஞ்சய் குமார் ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ.30 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
இதைத்தொடர்ந்து, நிதி நிறுவன ஊழியர்களும் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர்.
அப்போது, ஒரு இடத்தில் சாலையில் இருந்த வேகத் தடையில் மோதி ஒரு இரு சக்கர வாகனம் விழுந்தது. அதை ஓட்டிய விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சையது ரியாஸ், 22, என்ற கொள்ளையர் மட்டும் பிடிபட்டார்.
அவரை நிதி நிறுவன ஊழியர்களும் பொதுமக்களும் அடித்து, உதைத்தனர். தலையில் பலத்த காயமடைந்த சையது ரியாஸ், வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளைத் தேடி, ஆந்திரா, திருச்சி ஆகிய இடங்களுக்கு தனிப்படை காவலர்கள் விரைந்துள்ளனர்.
இஸ்மாயில், பரத், கிஷோர், ஜானி, தமிழ், மொட்டை ஆகியோருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக சையது ரியாஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். தப்பியோடிய கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்து, பணத்தை மீட்கும் பணிகளைக் காவல்துறையினர் தீவிரப் படுத்தியுள்ளனர்.
கடந்த 13 ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டு அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. 'ஜென்டில் மேன்' படத்தைப் பார்த்து கொள்ளை யடித்ததாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஒரே வாரத்துக்குள் மீண்டும் அதே பாணியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

