சென்னை: பதினாறு வயது சிறுமியைச் சீரழித்து, கருமுட்டைகளையும் விற்பனை செய்த நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிறுமியின் தாயே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஈரோட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து அண்மையில்தான் தகவல் வெளியானது. பாதிக்கப்பட்ட சிறுமியைப் பெற்றெடுத்த தாயே,மேலும் மூன்று பேருடன் இணைந்து மகளிடம் இருந்து எடுக்கப்பட்ட கருமுட்டைகளைத் தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்து வந்தார்.
காவல்துறையிடம் சிக்கிய பிறகே இந்தக் கும்பலின் அட்டூழியச் செயல் அம்பலமானது. இதையடுத்து, நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவர்களிடம் இருந்து சிறுமியின் கருமுட்டைகளை வாங்கிய தனியார் மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இம்மருத்துவமனைகளில் காவல்துறையினருடன் இணைந்து தமிழக அரசின் மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் தலைவர் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகள் என்றும் பாராமல் சிறுமியைக் கொடுமை செய்த அவரது தாய் சுமையா, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட நான்கு பேருக்கும் அதிகபட்ச தண்டனை பெற்றுதர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

