சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதனால் ஓ. பன்னீர்செல்வமும் அந்த மேல்முறையீட்டு வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிமுக பொதுக்குழு முறைப்படி கூட்டப்படவில்லை, அது செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வமும் பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான வைரமுத்துவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கே அனுப்பி வைத்தது.
அதன்படி, வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என அதிரடியாக அறிவித்தது.
"அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்.
"ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்ட வேண்டும்.
"புதிய பொதுக்குழுவை மீண்டும் கூட்டலாம். ஆனால் அதற்காக சட்ட ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதுவரை ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும்," என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே மேல்முறையீட்டு வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டு உள்ளார்.

