செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c1d131e2-8b83-4ca9-9997-00c66bb341ce
-

கிருஷ்ண ஜெயந்தி;

ஆளுநர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக, தெலுங்கானா ஆளுநர்கள் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்தியில், கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், தமிழ்நாடு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகவான் கிருஷ்ணர், பல்வேறு அவதாரங்களாலும், வாழ்க்கை நிலைகளாலும், அன்பு, இரக்கம், நீதி மற்றும் கடமைகள் ஆகியவற்றின் பெருமதிப்பை நமக்கு கற்றுக் கொடுத்தார் என்றார். தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், "எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிகளைச் செய்வதுதான் நமது கடமை. அதன் முடிவுகளை இறைவனிடத்தில் விட்டுவிட வேண்டும் என்ற தத்துவத்தை போதித்தவர் ஸ்ரீகிருஷ்ண பகவான்," என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி நாடு முழுவதும்

3,500 கி.மீட்டர் பாத யாத்திரை

சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொள்ளும் பாத யாத்திரையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் நான்கு நாள்கள் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அடுத்த மாதம் 7ஆம் தேதி மாலையில் கன்னியாகுமரி வரும் அவர், காந்தி, காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சுமார் மூன்று கி.மீ. தூரம் நடக்கிறார். ராகுல் காந்தியின் பாத யாத்திரையானது 3,500 கி.மீ. தூரம் 150 நாள்கள் நடைபெறுகிறது.

17 பேர் மீது கடும் நடவடிக்கை

எடுக்க சீமான் வலியுறுத்து

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குருவி சுடுவதுபோல மக்களை சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 17 காவலர்கள் மற்றும் உத்தரவிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அப்போதைய ஆட்சியரும் காவல்துறை அதிகாரிகளுமே முழுப்பொறுப்பு. துப்பாக்கிச் சூடு நடத்திட முறையான அனுமதியோ, வரைமுறையோ பின்பற்றப்படவில்லை" என ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், கடந்த மூன்று ஆண்டுகளில் 36 கட்டங்களாக விசாரணை நடத்தி, 1,426 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 1,048 பேர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்தனர்.