அமைச்சர்: பிற மாநிலத்தவர்கள் வியக்கும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன
சென்னை: நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை சென்னையில் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
"சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீரை அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும்.
"தமிழக முதல்வர் முன்பு சென்னை மேயராக இருந்தபோதுதான் சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கின. அப்போது இந்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
"தற்போது பிற மாநிலத்தவரும் பார்த்து வியக்கும் வகையில் சென்னையில் அனைத்து சேவைத் துறைகளையும் ஒருங்கிணைத்து சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதிகள் எனப் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன," என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
சென்னை மாநகராட்சியில் 2,071 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன என்றும் இந்த மழை நீர் வடிகால் முறையாக தூர்வாரி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டால்தான் மழைக் காலங்களில் தண்ணீர் எந்தத் தடையுமின்றி செல்ல முடியும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைநீர் வடிகால்களை முறையாக தூர்வாராத காரணத்தால்தான் கடந்த ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து இந்த ஆண்டு மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே தொடங்கி உள்ளது சென்னை மாநகராட்சி. இதற்காக ரூ.738 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளைக் கண்காணிக்க பொறியாளர்களை நியமித்து சென்னை மாநகராட்சி ஆணையர் இரு மாதங்களுக்கு முன்பே உத்தரவிட்டார்.
இதன் பயனாகப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக வும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற பணிகள் நடப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

