சென்னை: தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்க வேண்டுமெனில், தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை என்பதை வலியுறுத்தும் சட்டத்தை இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழக அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் சேருவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80% பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தனியார் வேலைகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்ற வேண்டும்," என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

