கலப்பு மணம் புரிந்தவரின் மகனுக்கு 'சாதி, மதம் சாராதவர்' என சான்றிதழ்
சென்னை: சென்னையைச் சேர்ந்த 36 வயதான மனோஜ், காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மூன்று வயதாகும் தன் மகன் யுவனுக்கு சாதி, மதம் ஆகிய எதுவும் இல்லை என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் இணையதளம் மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தார். ஆனால் உரிய நேரத்துக்குள் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதி மன்றத்தை அணுகிய மனோஜ், தன் மகனை பள்ளியில் சேர்க்க சான்றிதழ் தேவைப்படுவதாக தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனோஜுக்கு சான்றிதழ் அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மூன்று வயதான யுவனுக்கு, 'எந்த சாதி பிரிவையும் சாராதவர், எந்த மதப் பிரிவையும் சாராதவர்' என்ற சான்றிதழை வழங்கி உள்ளார் தாசில்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்ல தடை நீங்கியது
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்ல நீதி மன்றம் விதித்திருந்த தடை நேற்றுடன் நீங்கியது. இதையடுத்து, நேற்று எதிரெதிர் அணியினரான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சிலர் நேற்று காலையே தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி நேற்று அலுவலகத்துக்கு வரக்கூடும் என்று தகவல் வெளியான நிலையில், அவர் திடீர்ப் பயணமாக சேலம் சென்றுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
எய்ம்ஸ் மருத்துவர்கள்: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானது
சென்னை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலிதாவுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வகை சிகிச்சைகளுமே மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டவைதான் என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்துள்ள அறிக்கையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித குறைபாடும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட ஏழு பேர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த அறிக்கை ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பி இருந்தார். இதையடுத்து ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார் அப்போதைய முதல்வர் பழனிசாமி.
பணி நேரம் அதிகரிப்பு: ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக மாநிலம் தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை தடையின்றி வழங்கவே பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அளித்த விளக்கத்தை மருத்துவர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பணிச் சுமை அதிகமாக உள்ளது என்றும் சிகிச்சை அளிப்பதை தவிர, நிர்வாகப் பணிகளையும் சேர்த்து பார்க்கவேண்டி உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களுக்கு வாரம் ஒருநாள் மட்டுமே விடுப்பு வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீன்களுக்கு இருக்கும் மதிப்புகூட தமிழக மீனவர்களுக்கு இல்லை என்கிறார் சீமான்
சென்னை: மீன்களுக்கு இருக்கும் மதிப்புகூட மீனவர்களுக்கு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் கூறியுள்ளார். குமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய நிலத்தை அழித்து விவசாயத்தை அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்ற அரசுகள் தற்போது மீனவ சமுதாயத்தையும் அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதாகச் சாடினார். "இந்த நிலை நீடித்தால் மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும். மத்திய அரசின் செயல்பாடு அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஒகி புயலில் இறந்தவர்களைக் கூட மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மீன்களுக்கு உள்ள மதிப்புகூட மீனவர்களுக்கு இல்லை," என்றார் சீமான்.
தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் பிரதமர், அதிபர் திரௌபதி முர்மு, துணை அதிபர் ஆகியோரைச் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. தமிழக முதல்வர் டெல்லி சென்று திரும்பியுள்ள நிலையில் தமிழக ஆளுநரும் டெல்லி செல்வதால் பல்வேறு ஆரூடத் தகவல்கள் வலம் வருகின்றன.

