சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை 2020ஆம் ஆண்டு புதிய விதிகளை அறிமுகம் செய்தது.
18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும்; அவர்கள் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்து இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அந்த விதிகளில் விதிக்கப்பட்டிருந்தன.
இதனை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தனி
நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆகம விதிகளைக் கடைப்பிடிக்காமல் அரசு கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார்களை நியமிக்க உள்ளதாக அவர்களின் மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அரசின் விதிகள் செல்லும்.
"கோயில்களைப் பொறுத்தவரை, ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள், ஆகம விதிகளைப் பின்பற்றாத கோயில்களைக் கண்டறிவதற்கு ஐவர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும்.
"ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்," என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

