செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
ddfca669-e80d-4dcf-8cca-4fc7d08fcb1d
-

தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துவதாக கே.எஸ்.அழகிரி புகார்

திருவாரூர்: தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் அரசியல் ரீதியான சந்திப்புகள், கருத்தரங்கங்கள் நடத்தப்படு வது முறையல்ல என்று திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார். "தமிழகத்தில் பாஜக காலூன்றுவது என்பது அரசியல் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நடக்காது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதன் காரணமாக பாஜகவுக்கு கூட்டம் கூட்டப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வரும் கூட்டம் தானாகச் சேரும் கூட்டம். பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது என்று கூறப்படுவது ஒரு மாயை," என்றார் கே.எஸ்.அழகிரி.

கீதா ஜீவன்: பெண்களுக்கான மாநிலக் கொள்கை விரைவில் அறிமுகம்

சென்னை: பெண்களுக்கான மாநிலக் கொள்கை விரைவில் வெளியாகும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சென்னையில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில் எண்ணற்ற பெண் ஆளுமைகள் சங்க காலம் தொடங்கி இப்போதுவரை சிறந்த சேவையாற்றி உள்ளதாகக் குறிப்பிட்டார். "எனினும் வரலாற்றில் பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். பெண்கள் உயர் கல்வி பெற மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் உட்பட பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசியலில் பெண்கள் பங்கேற்கவும் அதிகாரம் பெறவும் தலைமைப் பண்போடு முன்னேறவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துள்ளது," என்றார் அமைச்சர் கீதா ஜீவன்.

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி மனு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 25ஆம் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று விசாரணை தொடங்கியதும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தமக்கு கூடுதல் கால அவகாசம் தேவை என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பழனிசாமி தரப்புக்கு பதில் அளிக்கவும் பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் சில முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2,666 கட்டடங்களில் விதிமீறல்கள்

சென்னை: கட்டட விதிமீறல்கள் தொடர்பாக சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சென்னையில் விதிமீறல்களுடன் கூடிய 2,666 கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி, திட்ட அனுமதி பெறுபவர்கள் அதற்குரிய அளவு, விவரக் குறிப்பின் அடிப்படையில்தான் கட்டடங்களைக் கட்ட வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் விதிமீறல்கள் தொடர்கின்றன. இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த ஜூலை 25 முதல் ஆக.20ஆம் தேதி வரை தொடர்புடைய உதவிப் பொறியாளர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனுமதிக்குப் புறம்பாக விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் சில கட்டடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கிக் கொள்ளையில் தொடர்புள்ள எட்டாவது குற்றவாளி சிக்கினான்

சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கி கிளையில் கடந்த 13ஆம் தேதி 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எட்டாவது குற்றவாளி சிக்கினான். இது தொடர்பாக சென்னை காவல்துறையின் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஃபெடரல் வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் மேலாளராகப் பணியாற்றிய முருகன் என்பவரே இந்த கொள்ளைச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டுள்ளார். முதற்கட்ட நடவடிக்கையின்போது ஐந்து பேரைக் கைது செய்த காவல்துறையினர், வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். கொள்ளையர்களில் ஒருவரிடம் இருந்து மூன்றரை கிலோ நகைகளை வாங்கிப் பதுக்கிய காவல்துறை ஆய்வாளர், நகைக்கடை அதிபர் ஸ்ரீவத்சவ் ஆகியோரும் அடுத்தடுத்து கைதாகினர். இந்நிலையில், முருகனின் பள்ளித் தோழரான கேப்ரியேல் என்பவரும் இப்போது சிக்கியுள்ளார்.