சென்னை: இந்தோனீசியா, வியட்நாம் உள்ளிட்ட ஐந்து தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் விருதுகளை வழங்கிப் பேசிய அவர், தமிழ் மொழிக்கும் உலக மொழிகளுக்கும் இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின் தேவை என்றும் இத்தேவையை தமிழ் இருக்கைகள் மூலம் மேற்கொள்ள வழிவகை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் என்றார்.
"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்குகிறது.
செம்மொழித்தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் அமைக்கப்படும் என்று தாம் அறிவித்ததை நினைவுகூர்ந்த அவர், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
"முதல்கட்டமாக, ரீயூனியன் - டி லா ரீயூனியன் பல்கலைக்கழகம், இந்தோனீசியா - சுமத்ரா உத்தாரா பல்கலைக்கழகம், கம்போடியா - கெமர் மொழிகள் ஆய்வு மையம், வியட்நாம் - மொழிகள் மற்றும் பன்னாட்டு ஆய்வியல் பல்கலைக்கழகம், தாய்லாந்து - சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் விரைவில் ஏற்படுத்தப்படும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரனுக்கும் 2021ஆம் ஆண்டுக்கான விருதை பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான விருது பிரெஞ்சு அறிஞர் லூய்க் செவ்வியாருக்கும் முதல்வர் வழங்கினார்.
இந்தியாவிலேயே மிக அதிக அளவாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த நினைவுப் பரிசும் அடங்கியதாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

