வானிலை ஆய்வு: தமிழகத்தில்
5 நாட்களுக்கு கனமழை பெய்யும்
சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஐந்து நாட்களுக்கு பல இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கரையோரம், தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மூடும் அபாயத்தில் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பிரிவு
சென்னை: கடந்த 1963 முதல் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இதை, தமிழால் ஈர்க்கப்பட்டு, தமிழ்பயின்று, அறிஞரான க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மனியர் நிறுவினார். இதில், ஆய்வுக்கான வகையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் உள்ளன. இந்நிலையில் கொலோனின் தமிழ்ப் பிரிவை காக்க, அதன் உதவிப் பேராசிரியரான ஸ்வென் வொர்ட்மான் அண்மையில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 2021, ஜூலை 7ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த தமிழக அரசின் நிதியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக 2023 மார்ச் 31 வரை தமிழ்ப் பிரிவை காத்து தொடர உதவியதாக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பிரிவின் நிலைத்தன்மைதொடர நிதியுதவி தேவைப்படுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்ட பேராசிரியர் ஸ்வென், மேலும் ஓர் ஆண்டுக்கு நிதி அளித்து தமிழக அரசு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்லூரி துறைத் தலைவர் மீது நடவடிக்கை
திருச்சி: திருச்சி பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. படித்த மாணவி ஒருவர், ஒரு துறைத் தலைவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு துன்புறுத்தல்கள் செய்ததாகவும் முதல்வரிடம் புகார் அளித்தார். முதல்வர் விசாரிக்கும்படி கல்லூரி நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி 20 நாட்களுக்கு மேல் ஆகியும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கல்லூரியின் ஆங்கிலத் துறையில் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கல்லூரி முதல்வரைச் சந்தித்து, துறைத் தலைவரின் செயல்பாடுகள் தங்களுக்கு மன உளைச்சலைத் தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர்.
ஆடை உற்பத்தியாளர்களிடம் பணமோசடி
திருப்பூர்: பின்னலாடை உற்பத்தியாளர்களிடமிருந்து நூதன முறையில் பணம் பறிக்க ஒரு கும்பல் வலை விரித்து வருகிறது. குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தான் இந்த ஆசாமிகளின் இலக்கு.
கைத்தொலைபேசி எண், முகவரி விவரங்களை இணையம் வழி பெற்றுவிடுகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் வர்த்தகர் போலவே உரையாடி பணம் பறிக்க முயற்சி செய்கின்றனர்.
இதுபோன்ற மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி சிலர் பணத்தை இழந்துள்ளனர். ஆர்டர் வழங்குவதாக ஆசைகாட்டி மோசடி செய்வோரின் வலையில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என பின்னலாடை உற்பத்தியாளர்களில் ஒருவரான முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.

