தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்திற்கு அருகே உள்ள பகுதியில் வளைகாப்பு நடத்துமாறு கேட்டுக்கொண்ட கர்ப்பிணியை அவரின் கணவர் அடித்துக் கொன்றார்.
அந்தப் பெண் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருந்தார்.
பெண்ணின் கணவரான 20 வயது கே. அற்புதராஜ் என்ற ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
அவர் காய்கறிச் சந்தை ஒன்றில் வேலை செய்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
18 வயது எல். சக்தி எனும் பெண்ணை அற்புதராஜ் திருமணம் செய்துகொண்டார்.
கர்ப்பமானதும் பெற்றோரின் வீட்டில் வசிக்கச் சென்ற சக்தி தனக்கு வளைகாப்பு நடத்தவேண்டும் என்று அற்புதராஜைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் நிதி நெருக்கடியால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என காவல்துறையினர் கூறினர்.
சக்தியின் குடும்பம் இருக்கும் வீட்டிற்கு அற்புதராஜ் சென்றபோது இந்த விவகாரத்தின் தொடர்பில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மோசமடைந்து ஆத்திரத்தில் அவர் மனைவியை மோசமாகத் தாக்கியிருக்கிறார்.
அதற்குப் பிறகு வீட்டிலிருந்து கிளம்பிய அற்புதராஜ், சக்தி தனது தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை என்று மாமியாரிடம் கூறியிருக்கிறார்.
வீட்டிற்குத் திரும்பியபோது சக்தி நினைவிழந்த நிலையில் இருந்ததை சக்தியின் தாய் கண்டார்.
மகளின் முகத்திலும் கழுத்திலும் மோசமான காயங்கள் இருந்ததைப் பார்த்தவுடன் அவர் விருத்தாசலக் காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
மனைவியைக் கொன்றதை அற்புதராஜ் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

