மூன்று மாதங்களில் முதலீடுகளுக்கு 40% வட்டி தருவதாக கூறி ஏமாற்றினர்
திருப்பூர்: தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து ரூ.930 கோடி வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.171 கோடி அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு கோவை, திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு 'பாசி ஃபோரக்ஸ் டிரேடிங்' என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மூன்றே மாதங்களில் 40 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து பணத்தைத் திருப்பி அளிப்பதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியானது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் தங்கள் சேமிப்பு, வருமானம் ஆகியவற்றைக் கொண்டு 'பாசி' நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா எனப் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் முதலீடு செய்ததால் இந்நிறுவனம் குறுகிய காலத்தில் பிரபலமானது. இதன் எதிரொலியாக மலேசியா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்களும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டினர்.
இவ்வாறு சுமார் 58,000 பேர் முதலீடு செய்ததன் காரணமாக, 'பாசி' நிறுவனம் சுமார் ரூ.930 கோடி திரட்டியது. ஆனால் தாங்கள் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு உறுதியளித்தபடி பணத்தைத் தரவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். திருப்பூர் குற்றப்பிரிவில் ஏராளமான புகார்கள் மனுக்கள் குவிந்தன. இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணை மனநிறைவு அளிக்கவில்லை என புகார் அளித்த சிலர் குறைகூறியதை அடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.
விசாரணையின் முடிவில் 'பாசி' நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 58,571 பேர் இந்த நிறுவனத்தில் ரூ.930 கோடி முதலீடு செய்தது உறுதியானது.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி கூடுதல் வட்டி தருவதாகக் கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றியது தெரியவந்ததையடுத்து, அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய இந்தப் பண மோசடி தொடர்பாக 2013ஆம் ஆண்டு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக வழக்கு விசாரணை நீடித்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கைதான 'பாசி' இயக்குநர்களில் ஒருவர் விசாரணைக் காலத்தின்போது உயிரிழந்துவிட்டார். இதையடுத்து மற்ற இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக இவ்வழக்கை விசாரித்து வந்த கோவை நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
முதலீட்டாளர்களிடம் வசூலித்த தொகையை திருப்பி அளிக்க தயாராக இருப்பதாகவும் அதற்கு கால அவகாசம் தேவை என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் பயன் இல்லை.
அவர்களது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, 'பாசி' நிறுவனத்தின் இரு இயக்குநர்களான மோகன்ராஜ், கமலவள்ளி ஆகிய இருவருக்கும் 27 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும் இருவருக்கும் ரூ.171 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், 1,402 பேரிடம் வசூலித்து மோசடி செய்த தொகையை மட்டுமே தாம் அபராதமாக விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களைத் தேடிப்பிடித்து அவர்கள் இழந்த தொகையை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், விடுபட்டுள்ள அனைவருக்கும் உரிய தொகை போய்ச்சேர வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, 'பாசி' நிறுவனத்தின் சொத்துக்கள் செப்டம்பர் 2ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.

