சென்னை: பெற்ற தாய்க்கு உதவி ஏதும் செய்யாமல் நிர்க்கதியாய் விட்டுச்செல்ல முயன்ற மகனை சென்னை காவல்துறை அதிரடியாக கைது செய்தது. அமெரிக்கா செல்ல இருந்த மகன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 74 வயதான துர்காம்பாளின் கணவர் குப்புசாமி தமது 90வது வயதில் கடந்த மாதம் காலமாகிவிட்டார்.
இத்தம்பதியர்க்கு இரு மகன்கள், ஒரு மகள் என மூன்று பிள்ளைகள். இவர்களில் மூத்த மகன் காலமாகிவிட்டார். அமெரிக்காவில் இருக்கும் இளைய மகன் ராமகிருஷ்ணனால் தந்தையின் இறுதிச்சடங்குக்கு வரமுடியவில்லை. இதையடுத்து, குடும்ப வழக்கப்படி நடைபெறும் சடங்குக்காக மட்டும் பத்து நாள்களுக்குப் பிறகு அவர் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்தார்.
சடங்குகள் முடிந்த பின்னர் மகனுடன் இருக்க விரும்பியுள்ளார் ராமகிருஷ்ணனின் தாயார் துர்காம்பாள், ஆனால் மகனுக்கோ தாயை உடன் அழைத்துச் செல்வதில் விருப்பம் இல்லை.
இதை அவர் துர்காம்பாளிடம் தெரிவித்தபோது, அவர் வயதான காலத்தில் தம்மைக் கைவிட்டுவிட வேண்டாம் என மகனிடம் கெஞ்சி உள்ளார்.
அமெரிக்காவில் வசதியுடன் இருந்தாலும் தன் பெற்றோருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக ராமகிருஷ்ணன் எந்த உதவியும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது கணவரும் காலமாகிவிட்டதால், தானும் அமெரிக்காவுக்கு வருவதாகக் கூறியுள்ளார் துர்காம்பாள்.
ஆனால் ராமகிருஷ்ணன் இதை ஏற்கவில்லை. மேலும் பெற்ற தாய்க்கு செலவுக்கும்கூட பணம் தர அவர் முன்வரவில்லை எனத் தெரிகிறது.
மாறாக, தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட முடிவு செய்துள்ளார். இதை அறிந்த அவரது சகோதரி தன் வீட்டுக்கு துர்காம்பாளை அழைத்துச் சென்றார்.
இதையடுத்து திடீர் திருப்பமாக மகளுடன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்ற துர்காம்பாள், அங்கு நடந்த அனைத்தையும் கண்ணீர்மல்க விவரித்து புகார் அளித்தார்.
அதன் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் மூத்த குடிமக்கள் பெற்றோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பினர்.
கடந்த 22ஆம் தேதி ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றபோது, விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதையெல்லாம் எதிர்பார்க்காத ராமகிருஷ்ணன் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார். பின்னர் தனது தாயாருக்கு ரூ.8 லட்சம் கொடுப்பதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து, நீதிபதி அவரைப் பிணையில் விடுவித்தார்.

