சென்னை: பரந்தூர் பகுதியில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நிலத்தைத் தருபவர்களுக்கு வேறு இடத்தில் இலவச நிலமும் அதில் வீடு கட்ட பணமும் அளிக்கப்படும் என்றனர்.
மேலும், குடும்பத்தில் தகுதியானவருக்கு அரசு சார்பில் வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
"எந்த இடமானாலும், புதிய திட்டங்களைக் கொண்டு வரும்போது, விவசாய நிலங்களை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
"சென்னையிலேயே விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றால், மீனம்பாக்கம் விமான நிலையம், 2029ஆம் ஆண்டுடன் அதன் முழுத் திறனையும் எட்டிவிடும். சரக்கு கையாளுதல், தற்போதைய ஓடுதளத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றை அதற்கு மேல் செயல்படுத்த முடியாது," என்று அமைச்சர்கள் கூறினர்.
பெங்களூரு, மும்பையை ஒப்பிடும்போது நமக்கு இன்னொரு விமான நிலையம் தேவை என்றும் 11 இடங்களை ஆய்வு செய்ததில் பரந்தூர் தான் சிறந்த தேர்வாக அமைந்தது என்று அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.
பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக மொத்தம் 456,356 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.
"புதிய விமான நிலையம் அமைந்த பின்னர் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
"அதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகரிப்பு, பொருளாதார உயர்வு என தமிழகத்துக்கு வளர்ச்சி உண்டாகும்," என்று அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

