செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
ce0c76c5-e528-4852-acb0-2720ec91e7b6
-

திருவள்ளுவர் சிலைக்கு கலவைப் பூச்சு

குமரி: கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு கடுக்காய், சுண்ணாம்பு கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. திருவள்ளுவர் சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்படுவது வழக்கம். இதற்காக அண்மையில் சென்னை, தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்புக் குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றைக் கொண்டு சிலையைச் சுற்றிலும் 145 அடி உயரத்துக்கு சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்போது கலவை பூசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி காரணமாக இந்தக் கலவை பூசும் பணி நடைபெறவில்லை.

அரசு மின்னணுச் சந்தைப் பட்டியலில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம்

சென்னை: அரசு மின்னணுச் சந்தைப் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதாக அச்சந்தையின் தலைமை செயல் அதிகாரி பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மின்னணுச் சந்தை மூலமாக மேற்கொள்ளப்படும் மொத்த வணிகத்தில் 57% சிறு தொழில்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார். அரசு மின்னணுச் சந்தையின் இணையத்தளம் மூலம் மாநில அரசின் ஒத்துழைப்பு, வழிகாட்டுதலுடன் அதிகம் கொள்முதல் செய்யும் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பாதுகாப்புத் துறையில் கடந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய் கொள்முதல் செய்துள்ள நிலையில் இந்தாண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது," என்றார் பி.கே.சிங்.

அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை: அதிகாலை வேளையில் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் திடீரென தீ மூண்டது. இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஐந்து நோயாளிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதை சில நிமிடங்களில் அணைத்தனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கக்கூடும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுகவில் இணைந்த பாக்யராஜ்

சென்னை: நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் நேற்று முன்தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது கட்சிக்கு சோதனை வந்துள்ளது என்றார். "கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே எல்லோரும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்று பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். சிறிய தொண்டனாக என்னால் முடிந்த வேலைகளை கட்சிக்காக செய்ய இருக்கிறேன்," என்றார் பாக்யராஜ்.

ஈரோட்டில் வரலாறு காணாத மழை

ஈரோடு: வரலாறு காணாத வகையில், ஈரோடு மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்தில் பத்து சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, சுமார் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. அங்கு மேலும் சில தினங்கள் மழை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. இதேபோல் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருகிறது. இதற்கிடையே, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.