'நடிப்பில் நடிகர் சிவாஜியை மிஞ்சிவிடுவார் பன்னீர்செல்வம்'

'நடிப்பில் நடிகர் சிவாஜியை மிஞ்சிவிடுவார் பன்னீர்செல்வம்'

2 mins read
e72b96b0-9ccb-4ec6-beb5-da80c5a06459
ஜெயக்குமார். படம்: ஊடகம் -

ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக நன்மைக்காக புரட்சிப் பயணம் மேற்கொள்வேன்

சென்னை: முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம், சசி­கலா, டிடிவி. தின­க­ர­னுக்கு அதி­மு­க­வில் இட­மில்லை என்று எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் ஆத­ர­வா­ள­ரான முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், மூன்று பேரும் பெட்­டிப் பெட்­டி­யா­கப் பணம் வைத்­துள்­ள­னர் என்­றும் தங்­க­ளி­டம் கோடிக்­க­ணக்­கில் குவிந்­துள்ள பணத்தை வைத்து ஆள் பிடிக்­கும் வேலையைச் செய்து வரு­கின்­ற­னர் என்­றும் சாடி­னார்.

"சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்­கள் அணி மாறு­வ­தால் அதி­மு­க­வுக்கு பின்­ன­டைவு ஏற்­ப­டாது. ஓ.பன்­னீர்­செல்­வத்­தின் நடிப்பு ஆஸ்­கார் விரு­தையே மிஞ்­சி­வி­டும். அர­சி­ய­லைக் கைவிட்டு நடிப்­புத் துறைக்கு வந்­தி­ருந்­தால் ரஜினி, சிவா­ஜி­யையே ஓ.பன்­னீர்­செல்­வம் தோற்­க­டித்­தி­ருப்­பார்.

"கறந்த பால் மடி புகாது, கரு­வாடு மீனா­காது என்ற பழ­மொ­ழிக்கு ஏற்ப அதி­மு­க­வில் ஓ.பன்­னீர்­செல்­வம், சசி­கலா, தின­க­ரன் ஆகி­யோ­ருக்கு இடம் இல்லை. அவர்­க­ளி­டம் உள்ள பணம் பாதா­ளம் வரை பாய்­கிறது," என்­றார் ஜெயக்­கு­மார்.

ஜெய­ல­லிதா மரண அறிக்­கையை வெளி­யிட வேண்­டிய கடமை திமுக அர­சுக்கு உண்டு என்று கூறிய ஜெயக்­கு­மார், ஜெய­ல­லிதா மர­ணம் குறித்து தனி­யார் தொலைக்­காட்­சிக்குப் பேட்டி அளிக்­கும் சசி­கலா விசா­ரணை ஆணை­யத்­தில் முன்­னி­லை­யாகி சாட்­சி­ய­ம­ளிக்க தயங்­கி­யது ஏன் என்று கேள்வி எழுப்­பி­னார்.

"அதி­மு­கவைத் தோற்­க­டிக்க வேண்­டும் என்று சட்­டப்­பே­ர­வை­யில் எடப்­பாடி கே பழ­னிச்­சாமி ஆட்­சிக்கு எதி­ராக வாக்­க­ளித்த பன்­னீர்­செல்­வத்­துக்கு இனி அதி­மு­க­வில் என்­றுமே இடம் கிடை­யாது. அவ­ரது தற்­போ­தைய செயல்­பா­டு­கள் எது­வும் அதி­மு­க­வில் எந்­த­வித தாக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­தாது. பன்­னீர்­செல்­வம் மேற்­கொள்­வது மிரட்­சிப் பய­ணம்," என்­றார் ஜெயக்­கு­மார்.

முன்­ன­தாக நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஓ.பன்­னீர்­செல்­வம், அதி­மு­க­வில் இரு பிரி­வு­க­ளாக செயல்­ப­டு­வதை தாம் விரும்­ப­வில்லை என்­றும் இரு தரப்­பை­யும் இணைக்க வலி­யு­றுத்தி தமி­ழ­கம் முழு­வ­தும் விரை­வில் புரட்சிப் பய­ணம் மேற்­கொள்ள இருப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"அதி­மு­க­வில் உள்ள மேலும் பல தலை­வர்­கள் என் பக்­கம் வர உள்­ளார்­கள். அது யார் என்­பது பரம ரக­சி­யம். ஆறு­முக சாமி ஆணைய விசா­ரணை அறிக்­கையை முழு­மை­யாகப் படித்த பின்பு தான் கருத்து சொல்ல முடி­யும். கட்­சி­யின் நலன் கருதி சசி­கலா, டிடிவி தின­க­ரன் ஆகி­யோரை நேரில் சந்­தித்து கட்­சிப் பணிக்­குத் திரும்ப அழைப்பு விடுப்­பேன்," என்­றார் ஓ.பன்­னீர்­செல்­வம்.