சென்னை: இளைஞர்கள் கடமை உணர்வுடன் இருக்க, பொறுப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனது புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அனைத்து துறைகளிலும் தமிழ் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.
"இன்று இளையர்களுக்கு அதிக கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில விஷயங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை உயர்த்தும் சில விஷயங்கள் அவர்களை கீழ் நிலைக்கு அழைத்துச் செல்லும். அது எவை என்ற புரிதல் இருக்க வேண்டும்," என்றார் மயில்சாமி அண்ணாதுரை.
தமிழில் எழுதும்போது தமிழும் உயரும், தமிழனும் உயர்வான் என்று குறிப்பிட்ட அவர், இலக்கியம் தாண்டி அனைத்து துறைகளிலும் தமிழ் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்றார்.
" மாணவர்கள் தங்கள் இலக்கு என்ன என்பதை இயல்பாகவே கண்டுபிடிக்க முடியும். பின்னர் அதை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும்.
"அடுத்த தலைமுறைக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புத்தகம் படித்தால் மனதில் பொறி உருவாகும். எனது புத்தகமும் உங்களது திரியை பற்ற வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் உள்ளது," என்றார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.

