தூத்துக்குடி: லால்குடி அருகே உள்ள கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள திருமங்கலம் சாமவேதீசுவரர் கோவிலில் கலைக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வின்போது இரண்டு கல்வெட்டுகள் தென்பட்டன.
திருமங்கலம் சாமவேதீசுவரர் கோவில் ராமாயணக் காட்சிகளை தொடர் சிற்பங்களாகப் பெற்றுள்ள மிகச் சில தமிழகக் கோவில்களில் ஒன்று என்று டாக்டர் ராசமாணிக்கனார், வரலாற்றாய்வு மைய இயக்குநர் கலைக்கோவன் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொல்லியல்துறை இந்த கோவிலில் இருந்து 12 சோழர் கல்வெட்டுகளையும் நாயக்க அரசர் கல்வெட்டுகளையும் படியெடுத்து அவற்றின் சுருக்கங்களைப் புதுப்பித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
"கடந்த 1993ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கூடுதலாக ஐந்து கல்வெட்டுகளைக் கண்டறிந்து அவற்றின் செய்திகள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆய்வு மேலும் இரண்டு சோழர்கால கல்வெட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கலைக்கோவன்.
தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுகள் மூலம் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், திருவிடைமருதூரில் வசித்த தாழைக்குடியைச் சேர்ந்த வணிகர் ஆண்டபிள்ளையார் என்பவர் இங்குள்ள சுப்பிரமணியர் திருமுன்னைப் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கட்டியதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது என்றார்.
"மன்னர் பெயரோ, ஆட்சியாண்டோ இல்லாதபோதும், கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு அதனை பொதுக்காலம் 14ஆம் நூற்றாண்டுக்குரியதாக கொள்ளலாம்.
திருமங்கலம் சாமவேதீசுவரர் கோவிலில் மேலும் சில நாள்கள் ஆய்வு நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.

