சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என அம்மையம் முன்னறிவித்துள்ளது.
தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் செப்டம்பர் 1ஆம் தேதியும் மேற்குறிப்பிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும் சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் எனத் தெரிகிறது.
சென்னையில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் பகல் வேளையிலும் ஒரு மணிநேரம் மழை பெய்துள்ளது.
அடுத்த இரு தினங்களுக்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

