தஞ்சாவூர்: அதிமுகவில் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருவதாகவும் அது சரியான கருத்து எனத் தாம் கருதுவதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக என்ற தீய சக்தியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி, எது சரியான வழியோ அதைச் செயல்படுத்த வேண்டும் என்று தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"நேற்றுவரை நடந்ததை மறந்து விட்டு, 'எல்லாம் நல்லதற்கே, நல்லது நடக்கும்' என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். அவரவர் அவரவராக இருந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் நான் அனைவருக்கும் கூறுகிறேன்.
"அனைவரும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும். அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளும் நிலையில், அவர்கள் பழையதையே நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது," என்றார் தினகரன்.
நாடாளுமன்றத் தேர்தலை அனைவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் பற்றி தெரியாமல் பேசுவதாக விமர்சித்தார்.
"ஜெயக்குமார் தெரிந்து பேசுகிறாரா அல்லது எதுவும் தெரியாமல் பேசுகிறாரா? எனத் தெரியவில்லை. எட்டு வழிச்சாலை குறித்து கடந்த ஆட்சியின்போது திமுக முதலில் ஆதரவு தெரிவித்து, பின்னர் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களைப் போல் 'பல்டி' அடிப்பவர்கள் யாரும் கிடையாது. எட்டு வழிச் சாலை என்ன பெயரில் வந்தாலும் மக்களைப் பாதிக்கும்போது அதை நாங்கள் எதிர்ப்போம்," என்றார் தினகரன்.
சசிகலா, தினகரன் ஆகிய இருவரையும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் புரட்சிப்பயணம் மேற்கொண்டு அதிமுகவினரை ஒருங்கிணைக்கப் போவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மற்றொரு புறம், எடப்பாடி பழனிசாமியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமக்கு ஆதரவு திரட்ட உள்ளார். அதிமுகவில் இணைந்து பணியாற்ற சசிகலாவையும் தினகரனையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்போவதாக பன்னீர்செல்வம் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், அவரது கருத்துடன் ஒத்துப்போகும் விதமாக, டிடிவி தினகரனும் அதிமுகவினர் ஒருங்கிணைய அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே, 40 அதிமுக எம்எல்ஏக்களை தன்வசம் இழுக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

