ராமேசுவரம்: ஆறு மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தினங்களுக்கு முன்னர் ஆறு மீனவர்களும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களுடைய படகைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், பின்னர் படகையும் பறிமுதல் செய்தனர். இது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, கைது நடவடிக்கையைக் கண்டித்தும் பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் பிரச்சினை இன்றி மீன் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
கைதான மீனவர்களை உடனடியாக விடுவிப்பதுடன், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டம் முடிவடைந்த பின்னர் அதில் பங்கேற்ற மீனவர்கள் பலர் அமர்ந்தபடியே இலங்கைக் கடற்படையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

