மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகி நான்கு ஆண்டுகள் நிறைவு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து அவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'தந்தை சொல்படி நடப்பதால் வென்றபடியே இருக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். 'மேலும் வெல்ல மேன்மேலும் வாழ்த்துங்கள்' என்றும் தெரிவித்துள்ளார்.
கீழடியைப் பார்த்து வியப்பில் மூழ்கிய ருமேனியக் கல்லூரி மாணவி
சிவகங்கை: கீழடி அகழாய்வு நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகம் பிரமிப்பை ஏற்படுத்துவதாக ருமேனியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி சோனியா (20 வயது) தெரிவித்துள்ளார். அவருடன் வந்த குழுவினர் கீழடி செங்கல் கட்டடம், கூரை ஓடுகள், பானைகள், நீண்ட சுவர்கள், பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருள்களைப் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2,600 ஆண்டுக்கு முந்திய கட்டடம் உள்ளிட்ட வற்றைப் பார்க்க அதிசயமாக உள்ளது என்றார்.
வேளாங்கண்ணி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டுத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. எதிர்வரும் 7ஆம் தேதியன்று முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நடைபெறும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விமரிசையாக நடைபெறும் இந்தத் திருவிழாவில் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் தம்புராஜ் தெரிவித்தார். திருவிழாவிற்கு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் இரண்டாயிரம் காவல்துறையினரும் ஐந்து கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் 200 ஊர் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இடைநின்ற 40 ஆயிரம் மாணவர்களை தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை
சென்னை: பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை காவல்துறையினர் மூலம் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்கும் பணிகளை தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. இதையடுத்து ஆறு முதல் 19 வயதுடைய இடைநின்ற மாணவர்களைக் கண்டறியும் பணிகளைப் பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்மூலம் சுமார் 2.6 லட்சம் மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு விட்டனர். எனினும் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறியும் பணிகளில் சுணக்கம் நிலவியது. இதன் காரணமாக காவல்துறையினர் உதவியுடன் இடைநின்ற மாணவர்களைத் தேடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநின்ற மாணவர்களைக் கண்டுபிடிக்க இயலும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
படிக்கட்டுப் பயணம்; மாணவன் மரணம்
மதுரை: அரசுப் பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த ஒன்பதாம் வகுப்பு மாணவன், தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் நிகழ்ந்தது. பேருந்தில் கூட்டமாக இருந்ததால் முன்பக்கப் படியில் நின்றபடி பயணம் செய்த பிரபாகரன் என்ற அச்சிறுவன், எதிர்பாராதவிதமாகப் பேருந்தில் இருந்து தவறி விழுந்தான். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோதும் ஏற்கெனவே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

