ஜெயலலிதா மரணம்: தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
குறிப்பாக, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இத்தகவல் வெளியானதை அடுத்து அதிமுகவினர் மத்தியில் பரபரப்பும் புது விவாதங்களும் எழுந்துள்ளன.
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் அரசுத்தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வி.கே.சசிகலா, சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் பரிந்துரைகள் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இது தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விவர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையைத் தமிழக சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது," என்று தமிழக அரசு மேலும் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும் அதைத்தொடர்ந்து அவர் மரணம் அடையும்போது அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரையும் விசாரித்த அந்த ஆணையம், சில நாள்களுக்கு முன்னர் தமிழக முதல்வரிடம் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இதனால் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அதிமுகவில் ஏற்கெனவே உட்கட்சிப்பூசல் வலுத்து வருகிறது. அதன் எதிரொலியாக மீண்டும் சசிகலாவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில் சசிகலாவை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்திருப்பது அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

