சென்னை: கடந்த ஆண்டு இந்தியப் பெருநகரங்களில், சென்னையில்தான் அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பட்டியலில் சென்னை முதல் இடத்தில் நீடித்து வருகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த 2021ஆம் ஆண்டில் நாடு முழுவதும் நடந்த போக்குவரத்து விபத்துகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் 57,090 வழக்குகள் பதிவாகி உள்ளன.
நாட்டில் நிகழும் விபத்துகளில் ஏறத்தாழ 40 விழுக்காடு போக்குவரத்து விபத்துகளாகும்.
கடந்த 2020ல் 146,354 விபத்துகள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 173,860 ஆக அதிகரித்தது.
அதே வேளையில் கடந்த 2019ஆம் ஆண்டு 181,113 பேர் சாலை விபத்துகளில் இறந்துவிட்டனர். அந்த எண்ணிக்கை 155,622ஆக குறைந்துள்ளது.
2021ஆம் ஆண்டு நாட்டிலேயே ஆக அதிகமாக தமிழகத்தில் போக்குவரத்து விபத்து வழக்குகளின் எண்ணிக்கை 57,090 ஆக பதிவானது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் விபத்துகளின் எண்ணிக்கை 49,493 ஆக அதிகரித்துள்ளது.
2020ல், உத்தரப் பிரதேசத்தில் 30,593 வழக்குகள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 36,509ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 21,792 பேர் உயிரிழந்துவிட்டனர். இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 15,384 பேர் மாண்டுவிட்டனர்.
நாடு முழுவதும் கடந்த 2021ஆம் ஆண்டில் போக்குவரத்து விபத்துகளால் 1.73 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டனர்.
2021ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 53 பெருநகரங்களில் பதிவான 55,400 விபத்துகளில், சென்னை பெருநகர எல்லைக்குள் மட்டும் ஏறத்தாழ 5,000 வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது முந்திய ஆண்டைவிட 15% அதிகம் என தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆக அதிகமாக 5,034 விபத்துகளும் டெல்லியில் 4,505 வழக்குகளும் பதிவாகி உள்ளன. எனினும் சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

