செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c25c10ba-785e-4c2b-86e7-4cecacf61d66
-

காவல்துறையினரிடமே கஞ்சா விற்க முயன்ற மூன்று இளையர்கள் கைது

கோவை: காவல்துறையினரிடமே 'கஞ்சா வேண்டுமா' என்று கேட்ட மூன்று இளையர்கள் கைதாகினர். நேற்று முன்தினம் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் அம்மூன்று இளையர்கள், 'கஞ்சா வேண்டுமா' எனக் கேட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். மூவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சாவைக் கைப்பற்றி உள்ளனர்.

உயர் நீதிமன்றம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி கொலை செய்யப்படவில்லை

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை என்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீமதி படித்த பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோருக்கு பிணை வழங்கும்போது நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது. உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில், நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

பிள்ளையார் சிலை விற்பனை விறுவிறு

சென்னை: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா முழுவதும் இன்று பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப் படுகிறது. இதையடுத்து, கடந்த இரு தினங்களாக சென்னையில் மண் பிள்ளையார் சிலைகளின் விற்பனை களைகட்டியது.

முதல்வர்: பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றும் பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனித்துறை பல்கலைக்கழகங்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக உள்ளது என்றும் உயர் கல்வியில் தமிழகம் மேலும் சிறக்க வேண்டும் என்றும் அவர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசியபோது குறிப்பிட்டார். மேலும், தேசிய கல்விக்கொள்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும் முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.