மதுரை: போக்குவரத்து அதிகரிக்கும்போது சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆகவேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை என்றார்.
"எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு திமுக எதிரி அல்ல. பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்றுதான் முன்னர் கூறினோம்.
"எட்டு வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது. போக்குவரத்து அதிகரிக்கும்போது சாலைகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அப்போது நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது," என்றார் எ.வ.வேலு.
இதற்கிடையே, விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் எட்டு வழிச் சாலை அமைக்க வேண்டும் என மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வையாபுரி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் அதிரடியாக நிலத்தைக் கையகப்படுத்த அரசு நினைத்தது என்றும் இதற்குத்தான் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.
"விவசாயிகளிடம் கருத்து கேட்டு அவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எட்டு வழிச் சாலை அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதிமுகவின் நோக்கமும் அதுதான்," என்றார் துரை வையாபுரி.
கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

